TAMIL -CORONA period and children's mental health VENKATACHALAM SALEM

Tamil the Hindu Thisai newspaper

கரோனாவும் குழந்தைகள் / மாணவர்களின் மன நலப் பாதுகாப்பும்

-- முகமது ஹுசைன்

.



தி இந்து தமிழ் திசை நாளிதழ்

Dated : 28 Aug 2021 

(நலம் வாழ) 

-=-=-=-=-=-=-=-=-=-=-

இரண்டு உலகப் போர்கள் கொண்டுவந்த பேரழிவுகளுக்கும் மேலான பாதிப்புகளை இந்த கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது, ஏற்படுத்திவருகிறது. 


கடந்த 20 மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், வேலையிழப்புகள், கூடுதல் பணி அழுத்தம், உடல் நல ஆபத்துகள், மன அழுத்தம், மன அதிர்ச்சிகள், துயரங்கள், வன்முறைகள் போன்றவை இதுவரை நாம் சந்தித்திராதவை. 


இவை ஏற்படுத்திய மன நலப் பாதிப்பு பெரியவர்களை மட்டுமல்ல; குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.


குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் அறிவாற்றலும் உணர்வு முதிர்ச்சியும் பெரியவர்களைப் போன்று இருப்பதில்லை. 


இதனால், பெருந்தொற்றால் வீட்டுக்கு உள்ளும் வெளியிலும் ஏற்படும் மாற்றங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதித்துள்ளன.


-=-=-=-=-=-=-=-=-

நழுவும் பிடிமானங்கள்


பெரியவர்களுக்குத் தொற்றுநோயால் ஏற்படும் மன அழுத்தம் தெளிவானது, வெளிப் படையானது. ஆனால், குழந்தைகளுடைய மன நலத்தின் மீதான கரோனா பெருந்தொற்றின் தாக்கம் மிகவும் சிக்கலானது. அது குறித்துப் போதுமான அளவு விவாதிக்கப்படவில்லை. 


துக்கம், பயம், நிச்சயமற்ற தன்மை, சமூகத் தனிமை, அதிகரித்த மின்னணு சாதனங்கள் - கணினிப் பயன்பாடு, பெற்றோரின் சோர்வு ஆகியவை குழந்தைகளின் மன ஆரோக்கி யத்தை எதிர்மறையாகப் பாதித்துள்ளன. நட்பும் குடும்ப ஆதரவும் குழந்தைகளுக்கான வலுவான பிடிமானங்கள். 


ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் இந்தப் பிடிமானங்களைப் பெருமளவு உலுக்கி, குழந்தைகளின் மன நலத்தைச் சீர்குலைத்துள்ளது.


-=-=-=-=-=-=-=-=-

பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்


நாவல் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பொது முடக்கத்தால், 33 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மார்ச் 2021 வரை குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வீட்டிலேயே முடங்கியிருந்ததாகத் தேசிய அளவிலான தரவுகள் தெரிவிக்கின்றன. 


குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினை எவ்வளவு தீவிரமானது என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டு கவனமாகவும் முதிர்ச்சியுடனும் கையாள வேண்டும்.


ஏற்கெனவே கரோனா பெருந்தொற்றால் தம்முடைய வாழ்வில் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மை, மன அழுத்தம் போன்ற வற்றைச் சமாளிக்கும் வழிதெரியாமல் பெற்றோர் தடுமாறி வருகின்றனர். 


இந்தச் சூழலில், தங்களுடைய பாதிப்புகளை மீறி, குழந்தைகளின் மனக் கவலைகளை அகற்றுவதும் அவர்களுக்கு மன அமைதி அளிப்பதும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் பெற்றோர்களுக்குக் கடினமான செயல்களாக மாறிவிட்டன. 


பெற்றோர் எதிர்கொள்ளும் தொழில்சார் நெருக்கடிகளும் உணர்வுரீதியிலான சவால்களும் குழந்தைகளின் தேவைகளை / கவலைகளை நிவர்த்தி செய்யும் வழக்கமான திறனில் குறுக்கிடுகின்றன.


-=-=-=-=-=-=-=-=-

கவலைக்கு உள்ளாக்கும் கேள்விகள்


பயம், ஏமாற்றம், சோகம், கவலை, கோபம், இழப்பு போன்ற எதிர்மறை உணர்வுகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது அசாதாரணமானதல்ல. ஆனால், கோவிட் -19 தொற்றுநோயின் நீடிப்பு, கட்டுப்பாடுகள், பரவும் தன்மை போன்ற தீவிர இயல்புகள் நிலைமையை மோசமாக்கியுள்ளன. 


மின்னணு திரையே கதியென்று இருப்பது, குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள் / அழுத்தங்கள், வீட்டிலேயே முடங்கியிருக்கும் வாழ்க்கை முறை ஆகியவை கூடுதல் சவால்களைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றன.


இதனால்தான், பள்ளி எப்போது திறக்கப்படும், எப்போது வெளியே சென்று விளையாட முடியும், எப்போது தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்ல முடியும் என்பது போன்றவையே குழந்தைகளைக் கவலைக்குள்ளாக்கும் கேள்விகளாக உள்ளன.


-=-=-=-=-=-=-=-=-

மன நலப் பாதிப்பின் அறிகுறிகள்


எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு:


l சேட்டை, எரிச்சல், அழுகை, எளிதில் வருத்தமடைதல், ஆறுதல் அளிப்பது கடினம்


l பகலில் தூங்குவது, இரவில் அதிகமாக விழித்திருப்பது


l தாய்ப்பாலைத் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பது அல்லது குடிக்க மறுப்பது


l உண்ணும்போது குமட்டல், தளர்வான மலம், மலச்சிக்கல், வயிற்று வலி


l பிரிவு ஏற்படுத்தும் கவலை, குழந்தையின் உணர்வுரீதியிலான சார்பை மேலும் அதிகரிக்கிறது


l புதிய விஷயங்களை ஆராயவோ பரிசோதனை செய்யவோ தயங்கி, எதன் மீதும் பிடிப்பற்ற நிலையில் இருப்பது


l அடிப்பது, உடைப்பது, கடிப்பது போன்றவை அடிக்கடி தீவிரமாக நிகழ்வது


l முறையாகப் பழகியிருந்தாலும் படுக்கையில் சிறுநீர் கழித்தல்


l ஏமாற்றமாகவோ, திருப்தியற்றோ, மகிழ்ச்சியற்றோ இருப்பது, உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல் இருப்பது


l விளையாடும்போதும் கதை சொல்லும்போதும் வன்முறை, சண்டை, நோய், மரணம் போன்றவை மட்டுமே கருப்பொருள்களாக இருத்தல்


எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு:


l மனநிலை மாற்றங்கள், எந்நேரமும் எரிச்சல், சட்டெனக் கோபமடைதல், அடிக்கடி சச்சரவில் ஈடுபடுதல், சண்டைகள், நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் உணர்ச்சிப்பெருக்கில் உருகுதல் அல்லது அழுதல்.


l சமூக நடத்தை மாற்றங்கள், மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் இயல்புகொண்ட குழந்தைகள் குறுஞ்செய்தி, அரட்டை, நண்பர்களுடன் உரையாடுவது ஆகியவற்றில் திடீரென்று ஆர்வம் குறைதல், எளிதில் பழகும் இயல்பில்லாத குழந்தைகள் மன இறுக்கத்துக்கும் சோர்வுக்கும் உள்ளாகுதல்


l முன்பு விரும்பி மகிழ்ந்த செயல்பாடுகள் அல்லது பொழுதுபோக்குகளில் ஆர்வமின்மை


l விழித்திருப்பது, தூங்குவது அல்லது இரண்டிலுமே சிரமம். ஆழ்துயில் இன்மை


l பசியின்மை, எடை மாற்றம், உணவு முறையில் மாற்றம், உண்ணும் நேரத்தில் மாற்றம், உணவு விருப்பத்தேர்வில் ஏற்படும் மாற்றம்


l நினைவுத்திறன், பகுத்தறியும் திறன், சிந்தனைச் செறிவு ஆகியவற்றைச் சுற்றியுள்ள அறிவாற்றல் பிரச்சினைகள்


l கற்றலிலும் வீட்டுப் பாடத்திலும் ஆர்வம் குறைதல்


l தோற்றம், அலங்காரம், தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றில் ஆர்வமின்மை


l போதைப்பொருள், மது போன்ற பொறுப்பற்ற அல்லது அடிமையாக்கும் நடத்தைகளில் ஈடுபடுதல்


l தற்கொலை எண்ணங்களை உணர்த்தும் மனப் போக்கு அல்லது நடத்தை, மரணம் அல்லது தற்கொலை பற்றிப் பேசுதல்


--=-=-=-=-=-=-=-=-

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?


l மன அழுத்தத்தைக் குழந்தைகளின் முன் வெளிப்படுத்தாமல் இருத்தல்


l அச்சுறுத்தும், எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மோசமான செய்திகள் குழந்தைகளை எட்டுவதைத் தவிர்த்தல்


l குழந்தைகளின் நடத்தையைக் கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்தல்


l குழந்தைகளின் நிலையைக் கரிசனத்துடன் அணுகுங்கள். அன்பை வெளிப்படுத்தி, பாசத்தை உணர்த்துங்கள்


l குழந்தைகளிடம் ஈடுபாட்டுடன் இருங்கள். அவர்களையும் குடும்பத்தில் / வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துங்கள்.


l குழந்தைகளுக்கு அன்றாட நடைமுறைகளை உருவாக்குங்கள். அதேநேரம், அவற்றை மிகுந்த கண்டிப்பின்றி நெகிழ்வுடன் வடிவமையுங்கள்


l குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அதே வேளை அவர்களின் தனிமைக்கு மதிப்பளியுங்கள்


l உறவுகளையும் நண்பர்களையும் உதவிக்கு அழைத்து, உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் ஒன்றும் ஆகாது என்கிற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள்


l தேவைப்பட்டால் மன நல மருத்துவர்களை அணுகுங்கள்


-=-=-=-=-=-=-=-=-

பள்ளியில் என்ன செய்ய வேண்டும்?


மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில் மாணவர்களைப் பாதுகாப்பது எப்படி?:


1. முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாகுதல்


2. முகக்கவசத்தை எப்படிக் கையாள்வது என்பதைத் தெளிவாக விளக்குதல்


3. கைகளை அடிக்கடி சோப்பாலும் கிருமி நாசினியாலும் கழுவுவதை ஊக்குவித்தல்


4. தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வலியுறுத்துதல்


5. கூட்டமாகக் கூடும் சாத்தியத்தைத் தவிர்த்தல்


6. பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்குப் போதிய இடைவெளி கிடைப்பதை உறுதி செய்தல்


7. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே போதிய இடைவெளி இருக்கும் விதமாகத் தற்காலிகத் தடுப்புகள் அமைத்தல்


8. காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, தொண்டைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, பசியின்மை போன்ற வற்றில் எது இருந்தாலும்,  மாணவர்கள்  கண்டிப்பாகப் பள்ளிக்கு வரக் கூடாது என்று அறிவுறுத்துதல்


-=-=-=-=-=-=-=-=-

இனி எல்லாம் நலமே


18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன. இருப்பினும், எல்லாக் குழந்தைகளாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது. தொற்றுநோய் பரவலால் குழந்தைகளிடம் தூண்டப்பட்ட மன அழுத்தத்தைச் சமாளிக்க நேர்மறையான பங்களிப்பைப் பெற்றோர் வழங்க வேண்டும். 


குழந்தைகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வார்கள் என்று கருதுவது பெரும் பிரச்சினைகளை உருவாக்கும். அதை அனுமதிக்காதீர்கள். 


உங்கள் குழந்தையின் மீது அக்கறையை வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்தப் பெருந்தொற்றுக் காலம் அளித்திருக்கிறது. இன்று நீங்கள் காட்டும் அக்கறை,  கரோனா  நெருக்கடியைக் குழந்தை சிறப்பாகச் சமாளிக்கவும் வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் உதவும்.


தொடர்புக்கு:

mohamed.hushain@hindutamil.co.in

.

.

source : 


https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/709938-covid-and-mental-health-of-students.html

-=-=-=-=-=-=-=-=-

நன்றி :  

தி இந்து தமிழ் திசை நாளிதழ்

Dated : 28 Aug 2021 

முகமது ஹுசைன்

(நலம் வாழ) 

-=-=-=-=-=-=-=-=-


Compiled 

by


Ezhilarasan Venkatachalam 

Salem 

Tamil Based English Trainer


Comments

Popular posts from this blog

How to play with your child List translation Ezhilarasan

FINLAND SCHOOLS METHOD WE SHOULD FOLLOW VENKATACHALAM SALEM CHILDCARE sandwich

Match stick and LENS // EZHILARASAN CHILDCARE ARTICLE